Reg No : PPM-001-10-03081957
The Kongu descendants of Namakkal District, (part of Kongu Belt) Tamil Nadu were brought to Peninsular Malaysia by the British towards the end of 19th and before the middle of 20th Century to work in the rubber plantations and public sector.
The majority of the Namakkal descendants who were living around Kuala Lumpur were serving in the Public Works Dept and Central Electricty Board. By 1950s they were plagued with socio-economic problems and they realised the pressing need to resolve the issues through organised channel. They looked forward to their counterpart in Singapore who had formed Namakkal Taluk Welfare Association to address similar issues.
The first meeting was held on 11-3-1956 at the Indian Association Building Kampong Atap, Kuala Lumpur. More than 100 descendants of Namakkal around Kuala Lumpur turned up for the meeting and formed the Namakkal Taluk Welfare Associaion. The founder members were Mr Sellamuthu, Mr Maruthu Gaunder, Mr Vaiyapuri Chettiar and a business man Mr Subramaniam Pillay.
Since then the Kongu descendants of Thiruchangode, Karur, Erode and Coimbatore are also taken in as members and the association name changed to Persatuan Kebajikan Namakkal Malaysia. Again in 2016 the by-laws were amended to include the entire Kongu community from Kongu Belt and to accommodate this change the name too changed to Persatuan Kebajikan Kongu Malaysia (Kongu Welfare Association of Malaysia) in August 2017. Presently the association has 18 active branches with more than 12,000 members.
Over the years the Malaysian Kongu community has progressively evolved from a labour workforce to professionals and self-employed. Generally the association provides community based cultural and social welfare development, educational guidance and interest free loans to the needy students to pursue higher education, entrepreneurial and empowerment programmes and ultimately serving Kongu community in Malaysia.
The association being a non-profit and non-governmental organization, yet undertakes to fulfill its social obligations to provide financial assistance to Malaysians who are affected by natural disaster such as tsunami, flood and fire victims and also supporting orphanage/disabled homes, etc.
தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டத்திலிருந்து (முன்பு சேலம் மாவட்டத்தின் ஒரு வட்டம்) அதிகமானோர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும், நாடு விடுதலை பெறுவதற்கு முன் மலாயாவில் (மேற்கு மலேசியா) காடுகளை அழித்து நாட்டைச் செப்பனிடவும் தோட்டங்கள், சாலைகள் அமைக்கவும் அன்றைய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டனர். அப்படிக் கொண்டுவரப்பட்டவர்களில் அதிகமானோர் மேற்கு மலேசியாவின் மேற்குக்கரை மானிலங்களிலும் சிங்கப்பூரிலும் குடியேறி ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு உண்மையான ஊழியர்களாகப் பணியாற்றினர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. அரசியல் கட்சிகள் உறுவாகின: சமூக இயக்கங்கள் தோன்றின, .அக்காலக்கட்டத்தில் 1948ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் குடியேறிய நாமக்கல் வாசிகளால் ‘நாமக்கல் தாலுகா நலனபிவிருத்தி சங்கம்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, அன்று அவர்கள் எதிர் நோக்கிய கல்வி, பொருளாதாரம், சமயம், பண்பாடு, வேலை வாய்ப்புகள் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முற்பட்டனர்.
அதே காலக்கட்டத்தில் கோலாலம்பூரிலும் மற்றப்பகுதிகளிலும் வாழ்ந்தத் தமிழர்களுக்கும் கல்வி, பொருளாதாரம், சமயம், வேலை வாய்ப்புகள் போன்ற பிரச்சனைகள் பாதிப்பை ஏற்படுத்தின என்றால் மிகையாகாது. அதில் நாமக்கல் வாசிகளும் அடங்குவர். அக்காலக்கட்டத்தில் தலைநகர் கோலாலம்பூரில் வாழ்ந்த தமிழர்களில் பெரும்பாலோர் பதினைந்தாம் கட்டை என்று அழைக்கப்பட்ட பிரிக்பீல், பங்சார், செந்தூல், புடு பகுதிகளில் வாழ்ந்தனர். 1954ஆம் ஆண்டு புடு, இலொக்யூ வட்டாரத்தில் (இன்று சன் பெங்) பொதுப்பணித்துறையில் வேலை செய்த ஒரு சிலர், அப்போது நாமக்கல் வாசிகள் எதிர் நோக்கியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண விழைந்தனர். அதற்கு முன்னோடியாக இருந்தவர் தமிழ்நாடு, நாமக்கல்லுக்கு அருகில் மின்னாம்புலி என்ற ஊரில் 1908இல் பிறந்து 1915இல் மலாயாவிற்கு வந்த திரு.மு.செல்லமுத்து என்பவராவார்.
அக்காலக்கட்டத்தில் திரு.மு.செல்லமுத்து அவர்களும், அதேத் துறையில் பணியாற்றிய திரு.மருது கவுண்டர், திரு.வையாபுரி செட்டியார் அவர்களுடன் திரு.சு.சுப்ரமணியம் பிள்ளையும் இணைந்து ஒரு மன்றத்தை அமைக்க முடிவு செய்தனர். அவர்களுடன் மேலும் சிலரும் இணைந்து செயலில் ஈடுபட்டனர். அதற்குச் சிங்கப்பூர் நாமக்கல் தாலுகா நலனபிவிருத்தி சங்கம் வழி காட்டியது.
அதன் முதலாவது அமைப்புக்கூட்டத்தை 11.3.1956இல் மாலை மணி 6.00க்குக் கோலாலம்பூர் கம்போங் அத்தாப் இந்தியர் சங்க கட்டிடத்தில் கூட்டினர். அதில் கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாமக்கல் வாசிகள் கலந்து, நாமக்கல் தாலுகா நலனபிவிருத்தி சங்கத்தைத் தோற்றுவிக்க முடிவு செய்து அதற்கான செயற்குழுவைத் தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: தலைவர்: திரு.மா.பழனிசாமி, துணைத்தலைவர்: திரு.மு.செல்லமுத்து, செயலாளர்: திரு.ப.இராமசாமி, துணைச் செயலாளர்: திரு.சு.சுப்ரமணியம் பிள்ளை, பொருளாளர்: திரு.ந.பழனியப்பன், செயலவையினர்: திரு.மு.குப்புசாமி, திரு.மா.கருப்பையா, திரு.கா.சுப்பையா, திரு.க.மணியம், திரு.வையாபுரி செட்டியார், திரு.மருது கவுண்டர், திரு.செல்லப்பன், திரு.வெ.மொட்டையன் (சிவனேசன்), திரு.வை.கருப்பையா,. கணக்காய்வாளராகக் கவிஞர் திரு.கா.பெருமாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த சங்கச் செய்தி 20.3.1956 தமிழ் நேசனில் இடம் பெற்றது. அதற்குப் பத்துதீகா திரு.பி.கந்தசாமி 16.4.1956 தமிழ் நேசனில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
மன்றத்தைப் பதிவு செய்ய அப்போது கோலாலம்பூர் பத்துரோட்டில் செயல்பட்ட சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மானிலங்களுக்கான மன்றங்களின் பதிவகத்திற்கு 8.5.1956இல் மனு செய்யப்பட்டது. அதைக் கவனித்து நடவடிக்கை எடுத்தவர் அப்போதையத் துணைப்பதிவாளர் திரு.கே.ஜி.ஜோர்ஜ் அவர்கள்.
பதிவகத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கப்பூர் நாமக்கல் தாலுகா நலனபிவிருத்தி சங்கத்தின் சட்டத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமையால் புதிய சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மன்றம் 8.3.1957இல் பதிவு செய்யப்பட்டு சான்றிதழும் கிடைத்தது. அப்போதைய பதிவு எண் 1115 (சிலாங்கூர்) 1956 என்பதாகும். உறுப்பினர் சேர்க்கும் வேலை 10.2.1957இல் தொடங்கப்பட்டது. சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மானிலங்கள் மட்டுமில்லாமல் மலாக்கா வரை சென்று உறுப்பினர்களைச் சேர்த்தனர். அப்போது உறுப்பினர்களாகப் பதிந்து கொண்டவர்கள்: திருவாளர்கள்: மா.பழனிசாமி, மு.செல்லமுத்து, சு.சுப்ரமணியம் பிள்ளை, வ.பழனிசாமி, பெ.வையாபுரி, வெ.மொட்டையன், வ.கருப்பையா ஆகியோர் முன்னிலை பெறுகின்றனர்.
மன்றத்தின் முதலாம் ஆண்டுப் பொதுக்கூட்டம் 6.10.1957இல் கோலாலம்பூர், கம்போங் அத்தாப் சிலாங்கூர் இந்தியர் சங்கக்கட்டிடத்தில் நடை பெற்றது. அப்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 80 ஆகும். பின்னாளில் அது படிப்படியாக உயர்ந்தது. சிலாங்கூரைத் தவிர்த்து கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், பகாங் மானிலங்களிலிருந்தும் பலர் உறுப்பினர்களாகப் பதிந்து கொண்டனர். அன்று அவர்களையெல்லாம் ஒன்றிணைத்துச் செயல்படுவது சிரமமாக இருந்தது.
15.5.1977இல் கோலாலம்பூர், சன் பெங் தமிழ்ப்பள்ளியில் கூடிய இருபத்தொன்றாம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் மன்றத்திற்குக் கிளைகள் அமைப்பதென முடிவு செய்யப்பட்டு அதற்கான விதி முறைகளும் உருவாக்கப்பட்டன. கிளைகள் அமைக்கும் அனுமதி 1980இல் கிடைத்ததும் சிலிம்ரிவர், தம்பின் (பின்னர் மலாக்கா என பெயர் மாற்றங்கண்டது), கோலாலம்பூர், கிள்ளான் கிளைகள் 1981இல் பதிவு செய்யப்பட்டன. பின்னாளில் சிப்பாங், ஜொகூர், பாசிர்கூடாங், குளுவாங், காராக், சிரம்பான், கேமரன்மலை, ஈப்போ, தெலுக் இந்தான், மஞ்சோங், அம்பாங், பத்துமலை, பெந்தோங், கூலிம் சுங்கை பட்டானி, பந்தாய் சிப்பாங் புத்திரா ஆகிய கிளைகள் பதிவு செய்யப்பட்டு செயல்படத்தொடங்கின.
மன்றம் 1956இல் கோலாலம்பூரில் செயல் பட்டதால் அதுவே கோலாலம்பூர் கிளையாகத் தொடர்ந்து செயல்படுகிறது. திரு.இரா.காளி தலைமையில் சிலிம்ரிவர் கிளையும், திரு.செ.அர்த்தனாரி தலைமையில் தம்பின் கிளையும், திரு.மு.கருப்பண்ணன் தலைமையில் கிள்ளான் கிளையும் பதிவு பெற்றன. அதற்குப்பிறகு படிப்படியாக திரு.நா.செல்லப்பன் தலைமையில் சிப்பாங் கிளையும், திரு.ப.இராஜூ தலைமையில் ஜொகூர் கிளையும், திரு.இரா.சுப்ரமணியம் தலைமையில் பாசிர்கூடாங் கிளையும், திரு.க.நல்லியண்ணன் தலைமையில் குளுவாங் கிளையும், திரு.பெ.சின்னப்பன் தலைமையில் காராக் கிளையும், திரு.இரா.செல்லப்பன் தலைமையில் சிரம்பான் கிளையும், திரு.பழ.இராமசாமி தலைமையில் கேமரன்மலை கிளையும், திரு.பெ.நல்லையா தலைமையில் ஈப்போ கிளையும், திரு.க.வீரப்பன் என்ற இராஜூ தலைமையில் தெலுக் இந்தான் கிளையும், திரு.இரா.இராஜேந்திரன் தலைமையில் அம்பாங் கிளையும், திரு.மு.கருப்பண்ணன் தலைமையில் மஞ்சோங் கிளையும், திரு.மு.மாரப்பன் தலைமையில் பத்துமலை கிளையும், திரு.பெ.கருப்பண்ணன் தலைமையில் பெந்தோங் கிளையும், திரு.இரா.பெரியசாமி தலைமையில் சுங்கைப்பட்டாணி கூலிம் கிளையும் திரு.க.குணசேகரன் தலைமையில் தாசின் கிளையும், திரு.சி.இலிங்கேசுவரன் தலைமையில் பந்தாய் சிப்பாங் புத்திரா கிளையும், இறுதியாக திரு. சண்முக சுந்தரம் தலைமையில் குவந்தான் கிளையும் தொடங்கப்பட்டன. இருப்பினும் ஜோகூர் கிளையும், சிப்பாங் கிளையும், மலாக்கா கிளையும் செயல்படாமல் மூடப்பட்டன.
மன்றத்தின் சட்டத்திட்டங்களின்படி இன, பால் வேறுபாடின்றி நாமக்கல் வட்டாரத்திலிருந்து வந்தோர் அனைவரும் உறுப்பினராகலாம். ஆனால் 1977ஆம் ஆண்டில் கொங்கு மக்கள் நாமக்கல் வட்டாரமன்றி திருச்சங்கோடு, கரூர், ஈரோடு, கோயமுத்தூர் மாவட்டங்களிலும் இருப்பதால், எல்லோரையும் ஒருங்கிணைக்கும் பொருட்டு ‘நாமக்கல் தாலுகா நலனபிவிருத்தி சங்கம்’ என்பதை 1980இல் ‘மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி மன்றம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1957இல் மன்றத்தில் இணைந்த உறுப்பினர்களில் அகவையில் மூத்தவர்களென அடையாளங் காணப்பட்ட முதல் ஐவர்: அனைவரும் தமிழகத்தில் பிறந்து மலாயாவில் குடியேறியவர்கள். 1. திரு.கந்தசாமி (1897இல் பிறந்து 1917இல் வந்தவர்), 2.திரு.மருது கவுண்டர் (1901இல் பிறந்து 1927இல் வந்தவர்), 3.திரு.செ.பெரியண்ணக் கவுண்டர் (1904இல் பிறந்தவர்), 4.திரு.சு.செல்லையா (1907இல் பிறந்தவர்), 5. திரு.மு.செல்லமுத்து (1908இல் பிறந்து 1915இல் வந்தவர்). 29.12.1924இல் சிலாங்கூர் மாநிலம், பந்திங்கில் பிறந்து 16.10.1957இல் மன்றத்தில் இணைந்த திரு.ப.கருப்பையா அவர்கள் முதல் மண்ணின் மைந்தர் என்ற பெருமையைப் பெற்றார்.
தமது இருபத்தைந்தாம் அகவையில் மன்றத்தில் இணைந்து, துணைச்செயலாளர், தொடர்ந்து பொருளாளர், செயலாளர், 1981இல் பொதுச்செயலாளர், பின் 1986முதல் 1991வரை தேசியத் தலைவராகப் பொறுப்பேற்று தன்னலங் கருதாது, அல்லென்றும் பகலென்றும் பாராமல் மன்றத்தைச் செவ்வனே வழி நடத்தி 1992 முதல் இன்னாள் வரை மன்றத்தின் வாழ் நாள் தலைவராகவும் ஆலோசகராகவும் செயலாற்றி வருபவர் திரு.வெ.மொட்டையன் என்று அழைக்கப்படும் திரு.வெ.மொ.சிவனேசன் ஆவார். அவர் தமிழகத்தில் பெருங்குடியில் தோன்றி மலாயாவிற்கு வந்தவர். அவரின் பொது நலத் தொண்டிற்காக 1993இல் அன்றைய சிரம்பான் கிளையின் தலைவர் திரு.இரா.செல்லப்பன் அவர்களின் பரிந்துரையின் வழி நெகிரி செம்பிலான் மானில ஆட்சியாளரால் பிஜேகே என்னும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
1956இல் நுழைவுக்கட்டணம் ஐந்து வெள்ளியாகவும் உறுப்பினரின் திங்கள் சந்தா ஒரு வெள்ளியாகவும் இருந்தது. 1967இல் நுழைவுக்கட்டணம் இரண்டு வெள்ளியாகவும் திங்கள் கட்டணம் ஐம்பது காசாகவும் குறைக்கப்பட்டது. 1972இல் திங்கள் சந்தா ஒரு வெள்ளியாக உயர்த்தப்பட்டது. 1980இல் கிளைகள் அமைக்க மன்றத்தின் விதி முறைகள் மாற்றங் கண்டபோது நுழைவுக்கட்டணம் பத்து வெள்ளியாகவும் வாழ் நாள் கட்டணம் 121 வெள்ளியாகவும் ஆண்டு கட்டணம் 24 வெள்ளியாகவும் உயர்த்தப்பட்டது. அதன் பின் வாழ் நாள் உறுப்பினரின் துணைவியர் நுழைவுக்கட்டணம் பத்து வெள்ளி வாழ்நாள் கட்டணம் 51 வெள்ளி செலுத்தி வாழ் நாள் உறுப்பினராகும் சலுகை வழங்கப்பட்டது. நடப்பில் வாழ் நாள் உறுப்பினர் கட்டணம் 201 வெள்ளியாகும். அத்துடன் ஒவ்வொருவரும் ஆண்டிற்கு ஐந்து வெள்ளி கல்வி நிதி செலுத்த வேண்டும்.
மன்றத்தின் ஆண்டு கணக்கு 1956இல் சனவரி முதல் நாளாகும். 1958இல் ஏப்ரல் முதல் நாளுக்கு மாற்றங்கண்டது. மீண்டும் அது 1980இல் சனவரி முதல் நாளுக்கு மாற்றப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது. 1958இல் 80 உறுப்பினர்களைக் கொண்டு 1,050 வெள்ளியாக இருந்த சொத்து இன்று ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. மன்றத்திற்கென பத்துமலையில் நான்கு மாடி கட்டிடத்தில் ஒரு மாடி சொந்தமாக்கப்பட்டுள்ளது.
மன்றத்திற்கு 27.3.1958இல் இந்தியன் பொருளகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது. 24.4.1958இல் மன்றத்தின் கணக்கைத் தணிக்கை செய்வதற்கு தி.செல்லப்பா என்ற தணிக்கை நிறுவனம் வெளி கணக்காய்வுக்கு நியமிக்கப்பட்டது. அதற்கு ஆண்டுக் கட்டணம் அறுபது வெள்ளியாகும். அச்சேவை 1968 வரை நீடித்தது. 1968இல் திரு.ப.கொளந்தானும் திரு.ந.செல்லப்பனும் உட்கணக்குத் தணிக்கையாளராக நியமிக்கப்பட்டு, வெளி கணக்காய்வாளர் முறை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.
மன்றம், 1979இல் மலாயா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை மேற்கொண்ட பந்திங்கைச் சேர்ந்த திரு.மாணிக்கம் என்பவருக்கு வட்டியில்லா கல்விக்கடன் வழங்கியது. அதுவே மன்றத்தில் கல்வி நிதி தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது. 1999இல் கல்வி நிதி திரட்டும் இயக்கம் தொடங்கப்பட்டது. அதற்குப் பொறுப்பாக மன்றத்தின் அப்போதைய துணைத்தலைவர் திரு.பெ.நல்லையா (அப்போதைய ஈப்போ கிளையின் தலைவர்) அவர்களை அப்போதையத் தலைவர் திரு.பெ.சின்னப்பன் நியமித்தார். 26.2.2000இல் பெரிய அளவில் பிரபல தங்கும் விடுதியில் தான்சிறீ சி.சுப்ரமணியம் தலைமையில் இரவு விருந்து நடத்தி 300 ஆயிரம் வெள்ளிக்கு மேல் திரட்டப்பட்டு இன்றுவரை வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் ஒருவருக்கு ஓராயிரம் வெள்ளி வழங்கப்பட்டது. பிறகு அது மூவாயிரம் வெள்ளியாகவும் தொடர்ந்து ஐயாயிரம் வெள்ளியாகவும் உயர்த்தப்பட்டது. இப்போது ஒருவருக்குக் கூடிய அளவாக பத்தாயிரம் வெள்ளி வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அதில் உள்நாட்டில் கற்பவர் மட்டுமில்லாமல் வெளி நாடுகளிலும் உயர் கல்வி பெறுவோரும் பயன் பெறுகின்றனர்.
மன்றத்தின் பொருளாதாரத்தைப் பெருக்குவதன் வழி நடைமுறை செலவுகளுக்கும் கல்விக்கடன் வழங்குவதற்கும் ஏதுவாக 2014ல் கோலாலம்பூரில் ஓராயிரம் பேரைத்திரட்டி இரவு விருந்து நடத்தப்பட்டது. அதன் வழி 300 ஆயிரம் வெள்ளி திரட்டப்பட்டது. அதில் 20 விழுக்காட்டுப் பணம் கல்வி நிதிக்கு ஒதுக்கப்பட்டது.
மன்ற உறுப்பினர் தவிர்த்து வெளியார்க்கும் மன்றம் தன்னாலான உதவிகளை வழங்கி வருகிறது. தொடக்கத்தில் வெண்டோ கல்வி நிறுவனத்திற்கு 1,001 வெள்ளியும், தேசிய வீரர் நிதி, தமிழ் நேசன் வசூலித்த தமிழ்ப்பள்ளி வளர்ச்சி நிதி ஆகிய வற்றிற்கும் நன்கொடைகள் வழங்கியுள்ளது. மேலும் மலேசிய நண்பன் வசூலித்த காமன்வெல்த் விளையாட்டு வீரர் திரு.சரவணனுக்கு மகிழுந்து வழங்கும் நிதிக்கு ஓராயிரம் வெள்ளியும் குஜராத் பேரிடர் நிதிக்குப் பத்தாயிரம் வெள்ளியும் வழங்கியுள்ளது. கெடாவில் நிர்மானிக்கப்பட்ட மஇகாவின் அறிவியல் பல்கலைக் கழகதின் கட்டுமானத்திற்குப் பத்தாயிரம் வெள்ளியும் வழங்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு இறுதியில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடருக்கு ஐயாயிரம் வெள்ளி பெருமானமுள்ள பொருள்களை வழங்கியுள்ளது. அத்துடன், மன்றத்தின் கிளைகளும் தன்னாலான உதவிகளைப் பாதிக்கப்பட்டோர்க்கும் வழங்கிவருகின்றன.
மன்றம் தொடங்கிய 1956இல் 40, பங்சார் வீதி, கோலாலம்பூர் என்ற முகவரியில் வாடகை அறையில் செயல் பட்டது. 1959இல் அப்போதைய தலைவர் திரு.மா.கருப்பையா அவர்களின் 49, சுங்கைபிசி வீதி, கோலாலம்பூர் கடை வீட்டிற்கு மாற்றங் கண்டது. பிறகு அது 107, பங்சார் வீதிக்கு மாற்றங் கண்டது. 26.8.1987இல் அப்போதைய பொதுச்செயலாளர் திரு.க.கிருஷ்ணமுத்து அவர்களின் இல்லமான 9, ஜாலான் கிறீஸ் 17, கிள்ளான் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டது. மன்றத்திற்கென 1996இல் பத்துமலையில் 103-2, ஜாலான் எஸ்பிசி 1, தாமான் சிறீ பத்துகேவ்ஸ், சிலாங்கூரில் வாங்கப்பட்ட கட்டிடத்திற்கு 1998இல் மாற்றங் கண்டு இது நாள் வரை செயல்படுகிறது.
1956 முதல் 1975 வரை மன்றத்தின் பொதுக்கூட்டங்கள் சிலாங்கூர் இந்தியர் சங்க கட்டிடம், பங்சார் ஈசுவரி மாவுமில், பிரிக்பீல் மசீச மண்டபம், விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, சோதி பவன் உணவகம், புகாரி உணவகம் என பல இடங்களில் நடை பெற்றன. 1976 முதல் 1980 வரை கோலாலம்பூர் சன் பெங் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றன. பள்ளியில் இடவசதி குறைவு என்பதால் 1981இல் கோலாலம்பூர் புடுவிலுள்ள புத்த விகார மண்டபத்தில் நடை பெற்றது. அதன் பின் 1984 வரை பேராளர் மாநாடுகள் மீண்டும் சன் பெங் தமிழ்ப்பள்ளியில் நடை பெற்றன.
1985 முதல் பேராளர் மாநாடுகளைக் கிளைகள் ஏற்று நடத்த முன் வந்தன. 29ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை 17.9.1985இல் சிலிம்ரிவர் கிளை சிலிம்ரிவரில் கூட்டியது. தொடர்ந்து மலாக்கா இரு முறையும், கோலாலம்பூர் மூன்று முறையும், சிப்பாங், கேமரன்மலை, குளுவாங், காராக், சிரம்பான், கிள்ளான், பாசிர்கூடாங் கிளைகள் தலா இரு முறையும், அம்பாங், ஈப்போ, தெலுக் இந்தன், பத்துமலை, பெந்தோங் கிளைகளும் நடத்தின. பாசிர்கூடாங்கும், காராக்கும் இரு நாள் மாநாட்டை நடத்தின. இடையில் இரு மாநாடுகளை (2000, 2001) தலைமையகமே ஏற்று நடதியது. பொன்விழா மாநாட்டை 30.4.2006இல் தலைமையகம் கோலாலம்பூர் பெர்ஜாயா தங்கும் விடுதியில் நடத்தியது.
47ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டிற்கு, பாசிர்கூடாங் கிளை 244 பக்கங்களில் வண்ண மலரை வெளியிட்டதுடன் பேராளர்களுக்குத் தங்கும் வசதியை இலவசமாக ஏற்பாடு செய்து சாதனை படைத்தது. மலர் விளம்பரம் வழி ஈட்டியப் பணத்தை முன் பணமாக வைத்து மாசாய் ஜெயாவில் ஒரு கட்டிடத்தைக் கொள்முதல் செய்தார் அதன் தலைவர் திரு.மு.இளங்கோ அவர்கள்.
மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளின் நலனைக்காப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் 2009ஆம் ஆண்டு முதல் மாணவர் விழா அப்போதையத் தலைவர் திரு.இரா.கருணாகரன் தலைமையில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடை பெற்ற விழாவில் ஆரம்பப்பள்ளி, கீழ் இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி அதற்கு இணையான அரசு தேர்வுகளில் சிறப்பாகத் தேறிய மாணவர்களுக்கு ஊக்குவிப்புகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதற்கு உயர்திரு முனைவர் இராஜ.குழந்தைசாமி அவர்கள் தொண்டு அடிப்படையில் ஆலோசகராகவும் மாணவர்களுக்குக் கல்வி வழிகாட்டி வழங்குபவராகவும் செயல்பட்டார்.
கோலாலம்பூரில் நடை பெற்ற முதல் விழாவிற்குப் பிரதமர் துறை துணையமைச்சர் திரு.தோ.முருகையாவும் இரண்டாவது விழாவிற்கு வெளியுறவு துணையமைச்சர் திரு. வீ.கோகிலன் பிள்ளையும், மூன்றாம் விழாவிற்குச் சிலாங்கூர் மானில முதல்வர் தன்சிறீ காலிட் இப்ராகிமும், நான்காம் விழாவிற்குப் பிரதமர் துறை அமைச்சர் டத்தோசிறீ கோ.பழனி வேலும், ஐந்தாம் விழாவிற்குக் கூட்டரசு வளாக துணையமைச்சர் டத்தோ மு.சரவணனும் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.
ஒவ்வொரு விழாவிற்கும் 130 மாணவர்களுக்குக் குறையாமல் கலந்து பயன் பெறுவதற்கு ஏறக்குறைய நாற்பதாயிர்ம் வெள்ளிக்கு மேல் செலவாவதாலும் சொகூர், கெடா மானிலங்களில் ஞாயிற்றுக் கிழமை வேலை நாளாக இறுப்பதாலும் பலர் கலந்து கொள்ள இயலமையால் 2014ஆம் ஆண்டுமுதல் மாணவர் விழா நடத்துவதை விடுத்து ஒவ்வொரு கிளை நிகழ்ச்சிகளில் ஊக்குவிப்புகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அவை மட்டுமல்லாமல் இடைநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, பல்கலைக்கழகத் தேர்வுகளில் மிகச் சிறப்பாகத் தெர்ச்சி பெறும் தலா ஒருவருக்குப் பேராளர் மாநாடுகளில் ஊக்குவிப்புத் தொகையும் பாராட்டுகளும் வழங்கப்படுகின்றன.
கிளைகளை ஒன்றிணைத்து கிள்ளான் கிளை 2013ஆம் ஆண்டுவரை கூட்டுப் பொங்கலை நடத்தி வந்தது. 2014இல் காராக் கிளை விழா நடத்தியது. 2015இல் கேமரன்மலை கிளையும் 2016இல் மஞ்சோங் கிளையும் இரு நாள் நிகழ்ச்சியாகவும் முதல் நாள் கறி விருந்தும் மறு நாள் பொங்கலும் வைத்து பெருமை படுத்தியது.
மன்றம் 1956இல் தோற்றங்கண்டது முதல் பல அரசியல், சமூகத் தலைவர்களும், கல்விமான்களும், சமய விற்பனர்களும் மன்றத்தின் பொதுக்கூட்டங்கள், பேராளர் மாநாடுகள், ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு வருகைதந்து நல்லாலோசனைகளும் ஊக்கவுரைகளும் வழங்கியுள்ளனர்; ஆண்டு மலருக்கு வழ்த்துகளும் வழங்கியுள்ளனர். அவர்களில் நினைவு கூறத்தக்க சிலர்:
சமய விளக்கங்கள்: தவத்திரு சிவசிறீ அ.ப.முத்து குமார சிவாச்சாரியார் அவர்கள் பேராளர் மாநாடுகளுக்கு வருகை தந்து சமயம் சம்மந்தப்பட்ட விளக்கங்களையும் வழிகாட்டிகளையும் வழங்கியுள்ளார். 1984இல் அவர் வழங்கிய “வீட்டில் வழிபாடு” என்ற வழிகாட்டி விளக்கங்கள் ஒளி, ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு அடக்க விலையில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. அவை பொது மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் உறுபினரல்லாதவர்களும் அவற்றைக் கேட்டு வாங்கிப் பயனடைந்தனர்; வெளி நாடுகளுக்கும் எடுத்துச் சென்றனர். அதன் வழி நமது சமய வழிபாடானது மேலும் சிறப்படைந்தது.
வாழ்த்துகள்: மன்றத்தின் சிறப்பு மலர்களுக்கு மாண்புமிகுகள் தான்சிறீ வெ.மாணிக்கவாசகம், துன் ச.சாமி வேலு, டத்தின்படுக்கா அய்சா கனி, தான்சிறீ சி.சுப்ரமணியம், தான்சிறீ ம.கேவியெஸ் போன்றோர் வாழ்த்துகள் வழங்கியுள்ளனர். நெகிரி செம்பிலான் முதல்வர் மண்புமிகு தான்சிறீ முகமது ஈசா, சிலாங்கூர் முதல்வர் மாண்புமிகு டத்தோ அபு அசான், மாண்புமிகு டத்தோசிறீ கோ.பழனிவேல் ஆகியோர் வாழ்த்துகள் வழங்கியதுடன் பேராளர் மாநாட்டிற்கும் வருகை தந்து சிறப்பித்துள்ளனர்.
இலக்கிய உரை: மன்றத்தின் பொதுக்கூட்டங்களுக்கு சிறீலங்கா தூதுவர் மேதகு செ.இராஜதுரை, மலாயா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் க.திலகவதி, முனைவர் வி.என்.செயராமன் போன்றோர் இலக்கியவுரை ஆற்றியுள்ளனர். மேலும் மோரிசியஸ் தீவின் தமிழர் நலங்காப்பாளர் மதிப்புமிகு தங்கணமுத்து அவர்களும் மன்ற நிகழ்ச்சிக்கு வருகைதந்து வெளி நாடுகளில் தமிழரும் தமிழ் மொழியும் பற்றி விவரித்துள்ளார். அவர்களனைவரும் கோலாலம்பூர் கிளையின் அன்றையத் தலைவர் திரு.பொ.சா.வெங்கடேசன் அவர்களின் அழைப்பின் பேரில் வந்திருந்தனர்.
1956இல் தோற்றுவிக்கப்பட்ட மன்றம் 2006இல் அரை நூற்றாண்டை அடைந்தது. அதற்கான சிறப்பு சின்னம் வடிவமைக்கப்பட்டு 15.12.2004இல் கோலாலம்பூர் பிரிக்பீல் புத்தர் கோவில் மண்டபத்தில் ஐனூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இரவு விருந்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
மன்றத்தின் ஐம்பதாம் ஆண்டுப்பேராளர் மாநாடும் பொன்விழா விருந்தும் 30.4.2006இல் கோலாலம்பூர் பெர்ஜாயா தங்கும் விடுதியில் நடைபெற்றன. அன்று காலை பேராளர் பதிவும் மாநாடு திறப்பும் நடைபெற்றன. பிற்பகலில் மன்றத்தின் தலைவர் திரு.இரா.இராஜூ தலைமையில் பேராளர் மாநாடு நடைபெற்றது. அதில் நூற்றைம்பதுக்கும் மெற்பட்டோர் கலந்து கொண்டனர். அன்று இரவு விருந்தில் ஓராயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். அதில் தமிழ்த்திரைப்பட நடிகர் திரு.விஜய கிருஷ்ணராஜ் அவரது துணைவியாருடன் கலந்து கொண்டார். பொன்விழாவில் சிறப்பு நினைவு மலர் வெளியிடப்பட்டது. விழாக்குழுத்தலைவராக பத்துமலை கிளையின் தலைவர் திரு.கா.தங்கமுத்து தலைமையேற்றிருந்தார்.
1956இல் தோற்றங்கண்ட மன்றத்திற்கு 2016இல் அறுபது ஆண்டு நிறைவு பெறுவதால் வைரவிழாவும் அனைத்துலக கொங்கு மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் வெளி நாட்டு சொந்தங்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அன்று கோலாலம்பூர் நெகாரா அரங்கில் பிற்பகலில் நடைபெற்ற கொண்டாட்டத்திற்கு நம் நாட்டின் அன்றைய பிறதமர் மாண்புமிகு டத்தோசிறீ முகமது நஜிப் இரசாக் கலந்து சிறப்பித்தார். அதில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் வைரவிழா சிறப்பு நினைவு மலர் வெளியிடப்பட்டது. விழா ஏற்பாட்டுக்குழுவிற்குப் பத்துமலைக்கிளையின் தலைவர் திரு.கா.தங்கமுத்து பொறுப்பேற்றுள்ளார்.
1979ஆம் ஆண்டுகளுக்கு முன் மன்ற நடவடிக்கைகளும் ஆண்டறிக்கைகளும் தாளில் எழுதி அல்லது தட்டச்சுமூலம் தயாரித்து படியிறக்கம் செய்து உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் 29.4.1979இல் கோலாலம்பூர் சன் பெங் தமிழ்ப்பள்ளியில் நடை பெற்ற 23ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு ஆண்டறிக்கை 48 பக்கங்களைக்கொண்ட மலராக அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
அடுத்து 1981இல் இருபத்தைந்தாம் ஆண்டு (வெள்ளிவிழா) பொதுக்கூட்ட அறிக்கை, விளம்பரங்கள் தேடி சிறப்பு மலராக அச்சிட்டு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை சிறப்பு மலர் ஆண்டறிக்கையோடு வெளியிடுவதென முடிவு செய்யப்பட்டு 1.9.1986இல் மலாக்காவில் நடை பெற்ற 30ஆம் ஆண்டுப் பேராளராளர் மாநாட்டிலும், 1.9.1991இல் பெந்தோங்கில் நடை பெற்ற 35ஆம் ஆண்டுப்பேராளர் மாநாட்டிலும் சிறப்பு மலர்கள் வெளியிடப்பட்டன. இடையில் 31.8.1990இல் குளுவாங்கில் நடை பெற்ற 29ஆம் ஆண்டுப்பேராளர் மாநாட்டிற்குக் குளுவாங் கிளை சிறப்பு மலரை வெளியிட்டு ஐந்தாண்டிற்கு ஒரு முறை என்றத்திட்டத்தை மாற்றியது. அதைச் செய்தவர் அப்போதைய குளுவாங் கிளையின் தலைவர் திரு.க.நல்லியண்ணன் ஆவார். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு மலரிகள் வெளியிடப்படுகின்றன. மலர் வெளியிடுவதின் வழி பேராளர் மாநாட்டிற்கான செலவை ஈடு செய்யலாம் என்ற வழிமுறையை 5.5.2002இல் கோலாலம்பூர் இஸ்தானா தங்கும் விடுதியில் 46ஆம் ஆண்டுப்பேராளர் மாநாட்டை நடத்திய பத்துமலை கிளை 344 பக்கங்களில் வண்ண மலரை வெளியிட்டதன் வழி கிளையின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டினார் அதன் தலைவர் திரு.கா.தங்கமுத்து. அன்று முதல் கிளைகளின் பண வலிமையைப்பெருக்க மலர் வெளியீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விளம்பரங்கள் தேடி மலர் வெளியிடுவது சிரமம் என்பதால் பேராளர் மாநாடுகளை ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு ஈராண்டுகளுக்கு ஒரு முறை பேராளர் மாநாடு நடை பெறுகிறது.
1993ஆம் ஆண்டில் அப்போதையத் துணைத்தலைவர் திரு.பெ.சின்னப்பன் தலைமையில் பத்துமலையில் நான்கு மாடி கட்டடத்தில் மூன்றாவது மாடியை 140,000 வெள்ளிக்கு மன்றம் வாங்கியது. அதற்கான பண உதவியைக் கிளைகள் நன்கொடைகளாகவும் கடன்களாகவும் கொடுத்து உதவின. அதையடுத்து கிள்ளான் கிளை கிள்ளானில் இரு மாடி கட்டிடத்தை வாங்கி கிளை அலுவலகத்தை அமைத்துள்ளது. தொடர்ந்து பாசிர்கூடாங் கிளை மாசாய் செயாவில் இரு மாடி கடை வீட்டை வாங்கி செயல்பட்டு வருகிறது. 2008ஆம் ஆண்டில் தலைமையகக் கட்டிடத்திற்கு மேல் உள்ள ஒரு வீட்டை 60,000 வெள்ளிக்குத் தலைமையகம் கல்வி நிதியில் வாங்கி வாடகைக்கு விட்டுள்ளது. அதன் வாடகை கல்வி நிதியில் வர்வு வைக்கப்படுகிறது.
1993இல் பத்துமலையில் கட்டடம் வாங்குவதற்குக் கோலாலம்பூர் கிளை இருபதாயிரம் வெள்ளியும் காராக் கிளை பத்தாயிரம் வெள்ளியும் சிலிம்ரிவர், மலாக்கா (தம்பின்), கிள்ளான், அம்பாங், சிரம்பான், தெலுகிந்தான், பாசிர்கூடாங், ஈப்போ, குளுவாங் ஆகிய கிளைகள் தலா ஐயாயிரம் வெள்ளியும் நன்கொடையாக வழங்கின. அவை தவிர்த்துத் தனி மனிதர்களும் நன்கொடை வழங்கினர்: அவர்கள் வருமாறு: திரு.இரா.சுப்ரமணியம் (பாசிர்கூடாங்) 2,003 வெள்ளி, தவத்திரு அ.ப. முத்துக்குமார சிவாச்சாரியார் 1,101 வெள்ளி, கேப்டன் க.நல்லையா (கோலாலம்பூர்) 1,001 வெள்ளி, அவர்களுடன் திருவாளர்கள்: செ.பழனியப்பன், வா.காளியண்ணன் (கோலாலம்பூர்) இரா.இராசேந்திரன் (அம்பாங்), க.நல்லியண்ணன் (குளுவாங்), க.கிருஷ்ணமுத்து (கிள்ளான்) ஆகியோர் தலா ஓராயிரம் வெள்ளியும், திரு.பொ.காளியண்ணன் (கோலாலம்பூர்) 550 வெள்ளியும், திருவாளர்கள்: கா.தங்கமுத்து (பத்துமலை),வே.முருகையா (கோலாலம்பூர்), இரா.சின்னுசாமி (காராக்), வே.இராமசாமி (அம்பாங்), க.இராமசாமி, கொ.மு.பெருமாள் (கேமரன்மலை), ஆகியோர் தலா 501 வெள்ளியும், திரு.க.மனோகரன் (தெலுக்கிந்தான்) 500 வெள்ளியும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அத்துடன் கட்டட சீரமைப்பிற்காக திரு. பெ.சுந்தர் (அம்பாங்) 6,000 வெள்ளி, திரு.இரா.சுப்பையா (கோலாலம்பூர்) 3,200 வெள்ளி, ஈப்போ கிளை 3,200 வெள்ளி, பத்துமலை கிளை 5,000 வெள்ளி பெறுமானமுள்ள பொருள்கள் நன்கொடையாகக் கிடைத்தன.
மன்றத்தின் முன்னாள் தலைவர் டத்தோ க.சுப்ரமணியம் தலைமையில் கூட்டுறவுக்கழகமும் இளைஞரணியும் மகளிரணியும் தோற்றுவிக்கப்பட்டன:
அ) ‘மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி கூட்டுறவுக்கழம்’ தோற்றுவிக்கப்பட்டு பதிவு செய்து இயங்கி வருகிறது. அதற்கு தொண்டு அடிப்படையில் ஒன்பது இயக்குனர்கள் பொறுப்பேற்றனர். நுழைவுக் கட்டணம் 201 வெள்ளி, பங்கு ஒன்று 2,000 வெள்ளி வீதம் இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதிந்து நான்கு மில்லியனுக்கும் மேற்பட்டத் தொகையை முதலீடு செய்துள்ளனர். நடப்பில் 3.5 மில்லியன் வெள்ளியில் கோலாலம்பூர் பழைய கிள்ளான் சாலையில் ஐந்து மாடி கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
ஆ) மன்றத்தில் இளைஞர், மகளிரணிகள் தலைமையகத்திலும் கிளைகளிலும் தொற்றுவிக்கப்பட்டு செவ்வனே செயல்பட்டு வருகின்றன. கருத்தரங்குகளும் பட்டறைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் வழி அதிகமான இளைஞர்களையும் பெண்களையும் மன்றத்தில் இணைக்க வழிவகுக்கும்.
இ) 2017ஆம் ஆண்டு மார்ச் திங்களில் பிரதமர் துறை அமைச்சின் சிடிக் பிரிவின் ஒத்துழைப்பு வழி மூன்று இடங்களில் (சனவரி 19 முதல் 22 வரை மஞ்சோங், தெலுக் பாத்திக்கிலுள்ள தங்கும் விடுதியில், மார்ச் 16 முதல் 18 வரை குளுவாங், மார்ச் 24 முதல் 26 வரை பூச்சோங்கில் தலா மூன்று நாள் பெற்றொரியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அதில் எல்லா கிளைகளிலிருந்தும் முன்னூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து பயனடைந்தனர்.
‘மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி மன்றம்’ என்ற பெயரை “மலேசிய கொங்கு நலனபிவிருத்தி மன்றம்” என்று மாற்ற 6.8.2017இல் நடைபெற்ற சிறப்பு பேராளர் மாநாட்டில் ஒப்புதல் கிடைக்கப்பெற்று 30.8.2017இல் மன்றங்கலின் பதிவகத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதற்கேற்ப கிளைகளும் பெயர் மாற்றத்தை செய்து கொண்டன. இனி மன்றம் மலேசிய கொங்கு நலனபிவிருத்தி மன்றம் என்ற பெயரிலேயே செயல்படும்.
2006ஆம் ஆண்டு சிலாங்கூர் மானிலத்தில் மிகச்சிறப்பாகச் செயல்படும் பொது அமைப்புகளுக்கு மலேசிய மன்றங்களின் பதிவிலாகாவால் பாராட்டுகளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதில் மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி மன்றத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்தது.
2014ஆம் ஆண்டு பகாங் மானில ஆட்சியாளரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.க.சுப்ரமணியம் அவர்களுக்குப் பகாங் மானில ஆட்சியாளர் டத்தோ விருது கொடுத்து மன்றத்திற்கு ஓர் அங்கிகாரத்தை வழங்கினார். அதற்குப் பரிந்துரை செய்தவர் ம.மு.க. தலைவர் உயர்திரு தான்சிறீ ம.கேவியெஸ் அவர்கள்.
2016ஆம் ஆண்டு மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.இரா.கருணாகரன் அவர்கள் இங்கிலாந்து பல்கலைக்கழத்திடமிருந்து முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் DR. இரா.கருணாகரன் அவர்களுக்கு மன்றம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதைத் தொகுத்தவர்: திரு.பொ.காளியண்ணன். கூட்டக்குறிப்பு செயலாளர். திருவள்ளுவர் ஆண்டு 2049)